முதன்மைக் கல்வி அலுவலரின் குடியரசு தின வாழ்த்துச் செய்தி
அன்பார்ந்த தலைமை ஆசிரியர் பெருமக்களுக்கும் ஆசிரியர் பெருமக்களுக்கும் வணக்கம்!
அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துக்கள்!
தங்களிடம் பேசி நாளாகிவிட்டதென எண்ணுகிறேன். பேசாவிட்டாலும் கண்ணுக்குத் தெரியாத உணர்வினால் உங்கள் அனைவரோடும் பிணைக்கப்பட்டுள்ளதாகவே எப்பொழுதும் உணர்கிறேன்.
உங்கள் அனைவரது அயராத உழைப்பின் காரணமாக இந்தக் கல்வியாண்டில் நம் இலட்சிய இலக்கான மாநிலத்தில் முதலிடத்தை பெறுவது கண்டிப்பாக கைகூடும் என்ற நம்பிக்கை ஆழமாக உள்ளது. ஆனால் தேர்வு நெருங்க நெருங்க மாணவர்களுக்கு பயம் வருகிறதோ இல்லையோ, உங்களோடு சேர்ந்து எனக்கும் சிறிது அச்சமாகத்தான் உள்ளது. ஆசிரியர்கள் அனைவரும் கடுமையாக உழைத்தாலும், நம் உழைப்பு யாருக்குப் பயன்படவேண்டுமோ, அந்தக் குழந்தைகள் ஒத்துழைப்பு நல்காத காரணத்தால், வீணாகிவிடுமோ என்ற பயம் சில நேரங்களில் தூக்கத்தைத் தொலைக்க வைக்கிறது.
அதே நேரத்தில் இறைவனின் அனுக்கிரகம் அனைவருக்கும் நீக்கமற உள்ளது என்னும் நினைவு மற்றும் நம்பிக்கை பயத்தை நீக்கி தெம்பைத் தருகிறது. நான் இறைவனை நம்புகிறேன்; அதேவேளையில் அந்த இடத்தில் வைத்து உங்களைத்தான் அதிகம் நம்புகிறேன்.
நம் மாவட்டத்தைப் பொறுத்தவரை அதிகாரிகளுக்காக வேலை செய்பவர்கள்அல்ல நீங்கள்; அனைவரும் அனைத்துக் குழந்தைகளையும் தம் குழந்தைகளாகப் பாவித்து அரவணைத்து அயராது உழைப்பதனால் அந்த தன்னலமில்லாத உழைப்பிற்கான பலன் கண்டிப்பாக கிடைக்கும் என்ற உறுதி மனதில் நீங்காது இருக்கிறது.
நம் புதுக்கோட்டை மாவட்டம் 12-ம் வகுப்பில் 16-வது இடத்திலிருந்து முதலிடத்திற்கும் 10-ம் வகுப்பில் 19-வது இடத்திலிருந்து முதலிடத்திற்கும் வரும் வேளையை கற்பனை செய்து பார்க்கிறேன். உங்கள் அனைவரது முகத்தில் தோன்றும் பெருமிதத்தோடு கூடிய மகிழ்ச்சியை என்னால் இப்போதே முழுமையாக உணர முடிகிறது.
இன்னும் முப்பதே நாட்கள்! புதுக்கோட்டை கல்வியில் பின்தங்கிய மாவட்டம் என்பதற்கான முடிவுரையை எழுதி கல்வியில் முன்னேறிய மாவட்டம்’ என்பதற்கான முன்னுரையை காண்பதற்கு இன்னும் ஒரே மாதம் தான் இருக்கிறது. இப்போது உள்ள முயற்சியைப் போன்று இன்னும் பலமடங்கு முயற்சியும், மனஉறுதியும் தேவைப்படும் நாட்கள் இவை. எந்த செயலாக இருந்தாலும் முடிக்கும்போதுதான் தியானம் செய்வதைப் போன்ற, குறிக்கோளை மட்டுமே நோக்கமாக கொண்ட ஒருமுகத் தன்மை பலமடங்கு தேவைப்படும். எவ்வளவு இடர்பாடுகள் வந்தாலும் தங்கள் கவனத்தை சிதறவிடாமல் நம் நோக்கம் நிறைவேறுவதற்கு கடுமையாக பாடுபடுவோம்.
நான் திருச்சியிலிருந்து திரும்பவும் புதுக்கோட்டையில் பொறுப்பேற்றதற்கு ஒரு அர்த்தம் இருக்கவேண்டும் என்று மனம் விரும்பினாலும் அது நம் கையில் மட்டுமல்ல; மாணவச் செல்வங்களும் மனம் வைக்கவேண்டும் என்ற நிலையில் வழி தவறிய ஆட்டுக்குட்டியை சிறப்பு கவனம் செலுத்தி நல்ல மேய்ப்பன் கவனிப்பதைப் போல, கோபம் கொள்ளாமல், மனம் தளர்ந்துவிடாமல் அன்பு செலுத்தி வழிக்குக் கொண்டு வாருங்கள்!
உங்களால் கண்டிப்பாக முடியும்!
உங்கள் மகிழ்ச்சியில் பங்கெடுத்துக் கொள்ளும் தருணத்தை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்!
அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
என்றும் அன்புடன்,
முதன்மைக் கல்வி அலுவலர்
புதுக்கோட்டை
No comments: